தான் இயல்பாக வசிக்கும் அண்டார்க்டிகாவில் இருந்து, குறைந்தது 3,000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நியூசிலாந்தின் கடலோரப் பகுதியில் பெங்குவின் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த 'அடெய்லி' வகை பெங்குவின், கடலோரப் பகுதியில் வழிதவறி நியூசிலாந்தை அடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
உள்ளூர்வாசிகள் இதனை 'பிங்கு' எனச் செல்லமாகப் பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.
நியூசிலாந்து கடலோரப் பகுதியில் அடெய்லி வகை பெங்குவின் கண்டறியப்பட்டது இது மூன்றாவது முறை.
கிறைஸ்ட்சர்ச் நகருக்கு தெற்கே அமைந்துள்ள பேர்ட்லிங்ஸ் ஃபிளாட் எனும் குடியிருப்புப் பகுதியை ஒட்டி இருக்கும் கடற்கரையில் காலாற நடந்து சென்றபோது, உள்ளூர்வாசியான திரு ஹேரி சிங் என்பவரும் அவரின் மனைவியும் இந்தப் பெங்குவினைக் கண்டனர்.
"முதலில் அதை ஒரு மென்மையான பொம்மை என்றே நினைத்தேன். திடீரென அது தலையை அசைத்த பின்னரே, அது உண்மையான பெங்குவின் என்பதை அறிந்தேன்," என்று திரு சிங், 'பிபிசி'யிடம் சொன்னார்.
"கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அது நகரவே இல்லை. அது களைப்பாக இருப்பதுபோல் காணப்பட்டது," என்றார் திரு சிங்.
பெங்குவின்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் தாமஸ் ஸ்ட்ராக்கே என்பவரின் துணையுடன் அன்று மாலையே அவர் பிங்குவை மீட்டார்.
இரத்தப் பரிசோதனையில் பிங்கு சற்று உடல் எடை குறைவாக இருந்ததும் உடலில் நீர்ச்சத்து குறைந்திருந்ததும் கண்டறியப்பட்டது. ஊட்டக்குழாய் வழியாக அதற்கு உணவும் திரவமும் வழங்கப்பட்டு வருகிறது.

