பெய்ஜிங்: சீனாவின் உலகப்புகழ்பெற்ற இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா குரூப் ஹோல்டிங், கடந்த 11 நாட்கள் நடத்தப்பட்ட 'ஒற்றை நாள் விற்பனைத் திருவிழா நிகழ்வில் S$114.5 பில்லியன் மதிப்புள்ள பொருட்களுக்கான அனுப்பாணையைப் (ஆர்டர்களை) பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 14 விழுக்காடு அதிகம்.
சீனாவில் ஒரு காலத்தில், இணையம் வழி பொருள்களை வாங்குவோர் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருந்தது. அதனையடுத்து இந்நிறுவனம் இதுபோன்ற விற்பனைத் திருவிழாக்களை அறிமுகப்படுத்தியது. அதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைப் பெரும் அளவில் ஈர்த்தது. 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் விற்பனைத் திருவிழாவால் அலிபாபா நிறுவனம் உலகின் முக்கிய இணைய வர்த்தக நிறுவனமாக மிளிர்ந்தது. அப்போது முதல் அந்நிறுவனம், இந்த '11 நாள் விற்பனை' நிகழ்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி மற்றும் நவம்பர் 11ஆம் தேதி காலகட்டத்தில் அந்நிறுவனம் நடத்திய தள்ளுபடி விற்பனைத் திருவிழா நல்ல பலனைத் தந்தது.

