காற்பந்து: புதிய உற்சாகத்துடன்
களம் கண்ட ஜெர்மனி
உல்வ்ஸ்பர்க்: புதிய நிர்வாகியான ஹன்சி ஃபிளிக் தலைமையில் உலகக் கிண்ண காற்பந்து தகுதிச்சுற்று ஆட்டமொன்றில் நேற்று அதிகாலை லிக்டன்ஸ்டைன் குழுவை எதிர்கொண்ட ஜெர்மனி ஒன்பது கோல்கள் போட்டு பதிலுக்கு கோல் எதுவும் விட்டுக்கொடுக்காமல் 9-0 என வெற்றி பெற்றது.
ஜெர்மன் அணி தற்காப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதால் ஹன்சி ஃபிளிக் ஐந்து வீரர்களை குழுவிலிருந்து ஒதுக்கிவைக்க ேவண்டியிருந்தது. எனினும், ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்ட ஜெர்மானிய குழு லிக்டன்ஸ்டைன் குழுவிற்கு எதிராக சரசரவென ஒன்பது கோல்கள் போட்டு எதிரணிக்கு விடை கொடுத்தது. ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்தில் ஆபத்தான முறையில் விளையாடியதற்காக லிக்டன்ஸ்டைன் குழுவின் யென்ஸ் ஹோஃபர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு திடலிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதில் கிடைத்த பெனால்டி வாய்ப்புடன் கோல் வேட்டையைத் தொடங்கியது ஜெர்மனி.
கொலம்பியாவை ஒருவாறு சமாளித்த பிரேசில்
சாவ் பாலோ: அடுத்த ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு பிரேசில் தன்னை எதிர்த்துப் போராடிய கொலம்பியாவை எப்படியோ சமாளித்து இறுதியில் 1-0 என வெற்றி கண்டது. ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் பிரேசில் வீரரான மார்கினோஸ் என்பவர் சக வீரர் நெய்மாரிடம் பந்தைக் கொடுக்க அவர் அதை லுக்காஸ பாக்கேட்டா என்பவரின் பாதையில் செலுத்த பாக்கேட்டா இரண்டு கொலம்பிய தற்காப்பு வீரர்களை சமாளித்து பந்தை கோல் வலைக்குள் செலுத்தினார். இதைத் தொடர்ந்து ஜெர்மனி, டென்மார்க், போட்டியை ஏற்று நடத்தும் கத்தார் ஆகிய நாடுகளுடன் பிரேசிலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
"இந்த கோல் இதுவரை நாங்கள் உழைத்த உழைப்புக்கு கிடைத்த பரிசு. இனி தொடர்ந்து கடுமையாக உழைத்து குழுவில் எனது இடத்தை தக்கவைத்துக் கொள்ளவேண்டும்," என்று பிரேசிலுக்காக கோல் போட்ட பாக்கேட்டா பெருமிதத்துடன் கூறினார். முதல் பாதி ஆட்டத்தில் கொலம்பியாவின் கை ஓங்கியிருந்ததாகவும் மறுபாதி ஆட்டத்தில் பிரேசில் தனது உத்தியை மாற்றி விளையாடியதால் வெற்றி கிடைத்ததாக வும் கூறப்படுகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மீண்டு வந்து விளையாடிய பாகிஸ்தான் வீரர்
துபாய்: பாகிஸ்தான் அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வான், டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், இரண்டு இரவுகளை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கழித்தார் என்பதை பாகிஸ்தான் குழு நிர்வாகம் உறுதிசெய்தது.
ரிஸ்வான் மருத்துவமனையில் படுத்தபடுக்கையாக இருந்த புகைப்படம் ஒன்றை சோயப் அக்தர் சமூக ஊடகத்தில் வெளியிட்டு பாராட்டியுள்ளார்.
முகமது ரிஸ்வான், குளிர்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று முன்தினம் களத்திற்குள் வந்து அருமையாக விளையாடியதால் அவரை கதாநாயகன் என்று புகாழரம் சூட்டியுள்ளார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். நுரையீரல் பிரச்சினையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ரிஸ்வான். மேத்யூ ஹைடனும், இந்தச் செய்தியை உறுதி செய்துள்ளார். "அவர் ஒரு போராளி. இந்தத் தொடரில் அருமையாக ஆடினார். உயிருக்குப் போராடிய அவரிடம் மனவலிமை அதிகம் உள்ளதால்தான் அவரால் ஆட்டத்தில் பங்குபெற முடிந்தது," என்று கூறியுள்ளார்.