ஐ.நா.: பெலாரஸின் போலந்து எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியேறிகள், குழந்தைகளுடனும் முதியோருடனும் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களால் பெலாரஸ் நாட்டுக்குள்ளும் நுழையமுடியவில்லை. அண்டை நாடான போலந்துக்குள்ளும் நுழையமுடியவில்லை.
இந்த நெருக்கடியை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த பெலாரஸ் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது அண்டை நாடுகளின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் செயல் என்று ஐரோப்பிய நாடுகள் கண்டித்துள்ளன. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் நேற்று அவசரக் கூட்டம் ஒன்றை கூட்டியது. நல்வாழ்வுக்காக ஏங்கி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடுங்குளிரில் சிக்கித் தவிக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரை பெலாரஸ், அரசியல் நோக்கங்களுக்காக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது என்று அந்நாடுகள் சாடியுள்ளன. அத்துடன் அந்நாட்டில் மனித உரிமை மீறல்களும் அதிகரித்துக்கொண்டே போகிறது என ஐநா பாதுகாப்பு மன்றம், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தன. மனித உரிமை மீறலுக்காக பெலாரஸ் மீது புதிய தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த வாரம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

