விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

2 mins read
688ce91e-8af7-438f-b731-2ea123e1ee69
-

மீண்டும் உலகக் கிண்ணத்தை நெருங்கும் ஸ்காட்லாந்து

கிஷினாவ் (மொல்டோவா): கிட்டத்தட்ட 24 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது ஸ்காட்லாந்து. கடைசியாக 1998ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டிக்குச் சென்ற ஸ்காட்லாந்து, வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண 'பிளேஆஃப்' தகுதிச் சுற்றில் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது. அதை வென்றால் இவ்வணி அடுத்த ஆண்டு கத்தாரில் அரங்கேறும் உலகக் கிண்ணத்தில் போட்டியிடும்.

ஐரோப்பிய கண்டத்திற்கான உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றின் எஃப் பிரிவு ஆட்டத்தில் மொல்டோவாவை 2-0 எனும் கோல் கணக்கில் வென்று 'பிளேயாஃப்' தகுதிச் சுற்றில் போட்டியிடும் வாய்ப்பை ஸ்காட்லாந்து உறுதிசெய்தது. சுமார் 25 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இவ்வாண்டின் யூரோ போட்டிக்குத் தகுதிபெற்ற ஸ்காட்லாந்து, இப்போது உலகக் கிண்ணத்திலும் தனது ரசிகர்களின் வேதனையைத் தீர்த்துவைக்கும் வீம்புடன் ஆடிவருகிறது.

கோல்களால் நொறுக்கிய இங்கிலாந்து

லண்டன்: ஐரோப்பிய கண்டத்திற்கான உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றின் ஐ பிரிவு ஆட்டத்தில் அல்பேனியாவை 5-0 எனும் கோல் கணக்கில் வதம் செய்தது இங்கிலாந்து. ஐந்து கோல்களில் மூன்றை அடித்தார் அணித் தலைவரும் நட்சத்திர ஆட்டக்காரருமான ஹேரி கேன் (படம்). இதர இரண்டு கோல்களை அடித்தவர்கள் ஜோர்டன் ஹெண்டர்சன், ஹேரி மக்குவாயர். அடுத்த ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதி.

சி பிரிவில் இத்தாலியும் சுவிட்சர்லாந்தும் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன. இதனால் பிரிவில் முதலிடத்தை வகிக்கும் இத்தாலி உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெறுவது இன்னும் உறுதியாகவில்லை. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிக்கு இத்தாலி தகுதிபெறவில்லை. இவ்வணி 60 ஆண்டுகளில் போட்டிக்குத் தகுதிபெறாதது அதுவே முதல் முறை. அதனைத் தொடர்ந்து யூரோ 2020 கிண்ணத்தை வென்று மீண்டும் சிறந்த அணியாக உருவெடுத்துள்ளது இத்தாலி.