மெல்பர்ன்: புதிதாக அறிவிக்கப்பட்ட கட்டாயத் தடுப்பூசித் திட்டங்களைக் கண்டித்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் தேசிய அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படவில்லை. எனினும், சில மாநிலங்கள் பல வேலைகளுக்குத் தடுப்பூசி போடுவதைக் கட்டாயப்படுத்தியுள்ளன.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் உணவகங்களுக்குச் செல்வது, இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது போன்றவற்றில் ஈடுபடமுடியாது. இத்தகைய விதிமுறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கிடையே, கிருமிப் பரவலிலிருந்து நன்கு மீண்டு வந்துக்கொண்டிருந்த சில ஐரோப்பிய நாடுகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துவரும் நெதர்லாந்தில் மீண்டும் தளர்த்தப்பட்ட முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளுக்கு எதிராக அந்நாட்டின் சில பகுதிகளில் வன்முறை கலந்த ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
புதிய கிருமித்தொற்று சம்பவங்களால் ஜெர்மனியும் அவதிப்படுகிறது. குறிப்பாக அந்நாட்டின் கிழக்குப் பகுதிகள் சிலவற்றில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அப்பகுதிகளில் போதுமானோருக்குத் தடுப்பூசி போடப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.
உலகில், தற்போது ஏழை நாடுகளில் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட ஆறு மடங்கு பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பாரபட்சம் நிறுத்தப்படவேண்டும் என்று நிறுவனம் வலியுறுத்தியது.

