மெல்பர்ன்: பருவநிலை மாற்றத்தைக் கையாள மலிவான, நீடித்திருக்கக்கூடிய தீர்வுகளை வழங்குமாறு ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் பன்னாட்டு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். நிறுவனங்கள் தங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு செலவைக் குறைத்த வண்ணம் பருவநிலை மாற்றத்தைக் கையாளவேண்டும், மக்களின் வரிப் பணத்தை சார்ந்திருக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு ஆதரவு வழங்கத் திரு மோரிசனின் அரசாங்கம் நிதியுதவி வழங்கப்போவதாக கடந்த வாரம் அறிவித்தது. எனினும், பருவநிலை மாற்றத்தைக் கையாள அவரின் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் போதாது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உலகில் நிலக்கரி, கரியமில வாயு ஆகியவற்றை ஆக அதிகமாகத் தயாரிக்கும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான அதன் அணுகுமுறையை ஆர்வலர்கள் 'கோப்26' பருவநிலை மாநாட்டில் பெரிதும் கண்டித்துப் பேசினர். 2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் நிறுத்துவதைத் திரு மோரிசன் இலக்காகக் கொண்டுள்ளார். எனினும், இலக்கை அடைய விதிமுறைகளை வரையப்போதில்லை என்றும் அதைச் சாத்தியப்படுத்த வாடிக்கையாளர்களையும் நிறுவனங்களையும் நம்பியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, புதைவள எரிபொருட்களுக்கான மானியங்களை எதிர்க்கும் கருத்துகள் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 'கோப்26' மாநாட்டில் வரையப்படும் பருவநிலை ஒப்பந்தத்தில் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட குழு முயற்சி செய்வதாக சில தகவல்கள் கூறுகின்றன. மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது.