நியூ ஒர்லீன்ஸ்: அமெரிக்காவில் 100 ஊழியர்களுக்கும் அதிகமானோரைக் கொண்ட நிறுவனங்களுக்கான கட்டாயத் தடுப்பூசித் திட்டத்தை நிறுத்தும் உத்தரவை அமெரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று உறுதிசெய்துள்ளது. இதனால் பெரிய நிறுவனங்களின் ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதைக் கட்டாயப்படுத்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சட்டத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
திட்டத்தை நிறுத்தும் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராகத் திரு பைடனின் அரசாங்கம் வாதம் செய்தது. அந்த வாதத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது. திரு பைடனின் கட்டாயத் தடுப்பூசித் திட்டம் அனைவருக்கும் பொருந்தாத மிகவும் பொதுப்படையான ஒன்று என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கூறியது. இத்திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் நடப்பிற்கு வந்தது.