டென்பசார்: ஆசியாவில் மின் மளிகை வர்த்தகம் சூடுபிடிப்பதால் யாரிடமிருந்து பொருட்களை வாங்குவது என்று முடிவெடுப்பதில் தென்கிழக்காசியாவில் உள்ளவர்களுக்கு இன்பமான சிக்கல் எழுந்துள்ளது. முதலில் கொவிட்-19 சூழலால்தான் வாடிக்கையாளர்கள் மின் மளிகை வர்த்தகர்களை நாடவேண்டியிருந்தது. இப்போதோ தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்குவது, உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவு வழங்குவது போன்ற காரணங்களுக்காகவும் வாடிக்கையாளர்கள் மின் மளிகை வர்த்தகர்களிடம் செல்கின்றனர்.
உதாரணமாக இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 'டானிஹப்' நிறுவனம் வழங்கும் சேவைகளின் மூலம் சுமார் 60,000 குடும்பங்களாலும் வர்த்தகங்களாலும் மில்லியன் கணக்கான விவசாயிகளையும் மீனவர்களையும் தொடர்புகொள்ளமுடியும். கடந்த ஜூலை மாதம் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கிருமிப் பரவலை முறியடிக்க கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினார். அதற்குப் பிறகு தனது விற்பனை மும்மடங்கானதாக 'டானிஹப்' தெரிவித்தது.
'கோஜெக்' நிறுவனத்துடன் இணையவிருக்கும் 'டோக்கோபீடியா' போன்றவற்றுக்கும் வர்த்தகம் சூடுபிடிக்கிறது.

