பேங்காக்: தாய்லாந்து விமானப் பயணங்கள் எண்ணிக்கை நவம்பர் 1 முதல் 10 வரை 9,919ஆக உள்ளது. இது அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 25% அதிகரிப்பு என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் அனைத்துலக விமானப் பயணங்களின் எண்ணிக்கை 2,243. நவம்பர் 1 முதல் நாட்டின் எல்லைகளைத் திறக்க அரசாங்கம் முடிவெடுத்ததன் விளைவாக இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விமானப் பயணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, வரும் டிசம்பர் முதல் ஜனவரி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் காலமாகக் கருதப்படுவதால் இந்த அதிகரிப்பு இருக்கும்.
தாய்லாந்தில் புதிதாக கொவிட்-19 அலை ஏதும் இல்லாவிட்டால் மாதத்திற்கு 30,000 முதல் 32,000 விமானப் பயணங்கள் திட்டமிடப்படக்கூடும்.