செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b127dc58-6a63-456e-a840-0b0903fb4964
-

சிலாங்கூர் காலரா சம்பவம்:

சுகாதார அமைச்சு எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா: சிலாங்கூர் மாநிலத்தில் காலரா சம்பவம் ஒன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதையடுத்து நன்கு சுத்தம் செய்யப்பட்ட நீரை மட்டுமே பருகுமாறு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சிலாங்கூரின் பெட்டாலிங் பகுதியில் மலேசியர் ஒருவருக்கு காலரா ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் கூடுதல் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று திரு கைரி தமது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார். காலராவுக்குச் சிகிச்சை பெறாத நிலையில், ஒருவரது உடலில் நீரளவு குறைந்து அது அவரின் மரணத்திற்கு இட்டுச் செல்லலாம்.

பயணிகளுக்குத் தனிமை உத்தரவை தளர்த்தும் கம்போடியா

நோம்பென்: கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பயணிகளுக்கு இன்றுமுதல் தனிமை உத்தரவு கிடையாது என்று கம்போடிய பிரதமர் ஹுன் சென் நேற்று தெரிவித்தார். தனிமை உத்தரவு பிறப்பிக்கும் நடைமுறை 18 மாதங்களாக நடப்பில் இருந்தது. இரண்டு தடுப்பூசிகளுடன் கொவிட்-19 பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானால் கம்போடியா எங்கும் பயணம் செய்யலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பெர்த் அருகே காட்டுத் தீ எச்சரிக்கை

மெல்பர்ன்: காட்டுத் தீ எச்சரிக்கையை மேற்கு ஆஸ்திரேலிய அவசரச் சேவைகள் பிரிவு நேற்று பிறப்பித்தது. பெர்த் மாநிலத்திற்கு கிழக்கே கட்டுக்கடங்காத காட்டுத் தீ ஏற்படும் என்றும் வீடுகளுக்கும் உயிர்களுக்கும் சேதத்தை ஏற்படுத்த வல்லது என்றும் தெரிவிக்கப்பட்டது.

எக்குவடோர் சிறையில் மீண்டும்

கலவரம் மூண்டுள்ளது

உவயாகில்: எக்குவடோர் சிறை ஒன்றில் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரத்தில் 68 பேர் உயிரிழந்ததை அடுத்து மீண்டும் அக்கைதிகளுக்கிடையே மோதல் மூண்டுள்ளதாக அதிபரின் பேச்சாளர் நேற்று முன்தினம் தெரிவித்தார். துப்பாக்கிகள், வெடிகள், கத்திகள் கொண்டு பல மணி நேரமாக சண்டை போட்டுக்கொண்டிருந்த கைதிகளைத் தடுத்து சிறையின் கட்டுப்பாட்டை போலிசார் மீண்டும் பெற்றுக்கொண்டதாகக் கூறப்பட்டது. புதிதாக மூண்டுள்ள கலவரத்தில் வேறு இரு கட்டடங்களின் கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்குவதாகப் பேச்சாளர் தெரிவித்தார்.