செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
88690d62-4773-40b2-970c-36cfdae39116
-

குவீன்ஸ்லாந்தில் கட்டுப்பாடுகள் தளர்வு

சிட்னி: குவீன்ஸ்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 70 விழுக்காட்டை எட்டிவிட்டது. இதையடுத்து, எல்லை கட்டுப்பாடுகள் நேற்று முதல் தளர்த்தப்பட்டன. முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்ற மாநிலங்களில் இருந்து குவீன்ஸ்லாந்திற்குப் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழும் அவசியம். ஆனால் அவர்கள் வீட்டில் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விகிதம் 80 விழுக்காட்டை எட்டும்போது வர்த்தக தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நோயெதிர்ப்பை அதிகரிக்கும் ஃபைசர்

மெல்பர்ன்: ஆய்வு ஒன்றில் பரிசோதிக்கப்பட்ட நான்கு கொவிட்-19 தடுப்பூசிகளில் ஃபைசர் தடுப்பூசி வலுவான நோயெதிர்ப்பு ஆற்றலைக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சினோஃபார்ம், ஸ்புட்னிக், ஃபைசர், ஆஸ்ட்ரஸெனகா ஆகிய நான்கு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்ட நாடான மங்கோலியாவில் சென்ற ஜூலை மாதம் 196 பேரிடம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சினோஃபார்ம், ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டவர்களுக்கு குறைவான, ஆஸ்ட்ரஸெனகா போட்டவர்களுக்கு மிதமான, ஃபைசர் போட்டவர்களுக்கு அதிகமான நோயெதிர்ப்பு ஆற்றல் உருவானதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மலாக்காவில் இன்று வாக்குப்பதிவு

மலாக்கா: மலேசியாவில் இன்று நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் 31 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யவுள்ளனர். வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதில் கிருமித்தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு விரலில் அழியாத மை வைப்பதற்காக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தூரிகை பயன்படுத்தப்படும் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் காந்தி சிலை சேதம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் மெல்பர்னின் ரோவில்லே பகுதியில் உள்ள ஆஸ்திரேலிய-இந்திய சமூக மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மகாத்மா காந்தி முழு உருவ வெண்கலச் சிலையை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் திறந்துவைத்தார். ஆனால், திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே காந்தி சிலையின் கழுத்துப் பகுதியை சிலர் வெட்ட முற்பட்டதாகக் கூறப்படுகிறது. வெண்கலச் சிலை என்பதால் அவர்களின் முயற்சி கைகூடவில்லை என்றாலும் சிலையின் கழுத்ததில் ஐந்து அல்லது ஆறு சென்டிமீட்டர் அளவு வெட்டு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.