லண்டன்: ஐரோப்பிய நாடுகளில் கிருமிப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அத்துடன் குளிர்காலமும் தொடங்கவுள்ளதால், கிருமிப் பரவல் மோசமாகக்கூடும் என்ற அச்சுறுத்தலும் நிலவுகிறது.
ஐரோப்பா முழுவதிலும் சென்ற மாதம் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளது.
ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் கிருமிப் பரவல் தொடங்கியதிலிருந்து ஆக அதிகமானோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஜெர்மனியில் சென்ற வாரம் ஒரே நாளில் 50,000த்திற்கும் அதிகமானோர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டனர்.
நெதர்லாந்திலும் ஆக அதிகமாக 16,000த்திற்கும் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகினர். இதனால் சென்ற சனிக்கிழமை முதல் மூன்று வாரங்களுக்குக் குறிப்பிட்ட சில பகுதிகளில் முடக்கநிலை கொண்டு வரப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகாரித்திருந்தாலும் முந்தைய கிருமிப் பரவல் காலத்தோடு ஒப்பிடும்போது உயிரிழப்புகள் பெருமளவில் இல்லை. அதற்கு தடுப்பூசியே பெரிதும் காரணம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ருமேனியா, பல்கேரியா உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தொற்று பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
ஆஸ்திரியாவில் தடுப்பூசி போடாதவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது குறித்து ஜெர்மனியும் பரிசீலித்து வருகிறது.
இதற்கிடையே, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் குளிர்காலத்தில் மீண்டும் ஒரு முடக்கநிலை வராது என்று சொல்ல
முடியாது எனக் கூறினார்.
"தற்போதைய நிலையில் கட்டுப்பாடுகள் தேவையாகத் தெரிய வில்லை. ஆனால் கிருமித்தொற்றுக்கு எதிராக நாம் மெத்தனமாக இருந்துவிட முடியாது," என்றார் அவர்.
கிருமிப் பரவலுக்கு எதிராக கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் ரீதியாக ஆபத்தானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.