பிலிப்பீன்சில் முகக்காப்பு கட்டாயமல்ல
மணிலா: பிலிப்பீன்சின் பெரும்பாலான பகுதிகளில் முகக் காப்பு அணிய வேண்டியதில்லை என்று கூறியுள்ளார் அதன் அதிபர் டுட்டர்டே. கிட்டத்தட்ட கடந்த ஓராண்டுக்கும் மேலாக முகக்காப்பு அணிவது அங்கு கட்டாயமாக்கப்பட்டிருந்தது. கடுமையான முடக்கநிலை நடப்பில் இருக்கும் பகுதிகளில் மட்டும் முகக்காப்பு அணிவது கட்டாயம் என்று அரசாங்கத்தின் அறிக்கை கூறுகிறது. கடந்த சில நாட்களாக பிலிப்பீன்சில் அன்றாடக் கிருமித்தொற்று சம்பவங்கள் 2,000த்திற்கும் கீழ் பதிவாகின்றன.
தடுப்பூசி பக்கவிளைவு:
இழப்பீடுகோரும் ஆஸ்திரேலியர்கள்
சிட்னி: கொவிட்-19 தடுப்பூசியால் ஏற்பட்ட அரிய வகை பக்கவிளைவுகளுக்காக 10,000த்திற்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் இழப்பீடு கோரியுள்ளனர். இதனால் அந்நாட்டு அரசாங்கம் 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் கொடுக்க நேரிடும் என்கிறது உள்ளூர் ஊடகம் ஒன்று.
அங்கு இதுவரை 36.8 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், பக்க விளைவுகள் குறித்து கிட்டத்தட்ட 79,000 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய மருந்து கட்டுப்பாடு நிர்வாகம் கூறுகிறது. இவற்றில் 288 சம்பவங்கள் ஃபைசர் தடுப்பூசியோடும்
160 சம்பவங்கள் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியோடும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் தடுப்பூசி தொடர்பில் அங்கு ஒன்பது மரணங்களும் பதிவாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானோர் 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.
'டாலியனில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும்'
பெய்ஜிங்: சீனாவில் நேற்று 11 புதிய உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன. முந்திய நாளைவிட இது குறைவு என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர். எந்த உயிரிழப்பும் இல்லை. சீனாவின் டாலியன் பகுதியில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சீன துணைத் தலைவர் சன் சுன்லான் கூறினார். அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பார்வையிட சென்றிருந்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
ஐரோப்பா, ஆசிய நாடுகளில் வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்
பாரிஸ்: ஐரோப்பா, ஆசிய நாடுகளில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக விலங்கு சுகாதாரத்திற்கான உலக அமைப்பு கூறியுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான கோழிகள் கொல்லப்படுகின்றன. இது பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடும் என்கின்றனர் தொற்று நோயியல் நிபுணர்கள்.
சீனாவில் 21 பேர் H5N6 எனும் உள்வகை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் 770,000 கோழிகள் இருக்கும் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிலும் இந்த ஆண்டு முதல் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளது. நார்வேயில் 7,000 பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பெல்ஜியம், பிரான்சிலும் பறவைக் காய்ச்சலால் கோழி இறைச்சி தட்டுப்பாடு நிலவுகிறது.

