டெக்சஸ்: பள்ளிக்கூடத்தில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் கழிவறை களின் கதவை அகற்ற உத்தர விட்டுள்ளார் அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஒருவர்.
டிராவிஸ் உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் கிறிஸ்டினா ஸ்டீல் ஹான்ட்கின், தமது இந்த முடிவு பற்றி விளக்கம் அளித்து பெற்றோர்களுக்குக் கடிதம் எழுதினார்.
அதில் பள்ளியில் நடைபெறும் போதைப்பொருள் குற்றங்களில் 90 விழுக்காடு கழிவறைகளில் நடைபெறுவதாகவும் கதவுகளை அகற்றியதால் அவை முற்றிலுமாக நின்றுவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அத்துடன் கழிவறைகளில் நடைபெறும் சண்டை, அடிதடி தாக்குதல்கள் போன்றவற்றையும் அது கட்டுப்படுத்த உதவுவதாகவும் அவர் சொன்னார்.
சென்ற 4ஆம் தேதியே கழி வறைகளில் கதவுகள் அகற்றப்பட்டு விட்டதாகவும் ஒரு வாரம் கழித்து தான் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் பெற்றோர் ஒருவர் கூறினார்.
மாணவர்கள் சிலர் இந்த முடிவு தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக கூறினாலும் பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருதி பள்ளிக்கூடத்தின் இந்த முடிவை சில பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.
ஆஸ்டினில் உள்ள மேலும் ஐந்து பள்ளிக்கூடங்களில் ஏற்கெனவே கழிவறைகளில் கதவுகள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் டெய்லி மெயில் செய்தி கூறுகிறது.