வாஷிங்டன்: கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் மூலம் பைசர், பயோஎன்டெக், மொடர்னா ஆகிய மருந்து நிறுவனங்களுக்குக் கூட்டாக விநாடிக்கு 1,350 டாலர் லாபம் கிடைப்பதாக பகுப்பாய்வு ஒன்று கூறுகிறது.
நிறுவனங்களின் சொந்த வருவாய் கணக்கை அடிப்படையாகக் கொண்டு, தடுப்பூசி கிடைப்பதை ஆராயும் மக்கள் தடுப்பூசி அமைப்பு இதனைத் தெரிவித்தது.
இந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் பெரும்பாலானவற்றை பணக்கார நாடுகளுக்கு விற்று லாபம் பார்த்துள்ளதற்கு மத்தியில், பெரும்பாலான ஏழை நாடுகள் தடுப்பூசி போடாமல் இருப்பதாகவும் அது கூறியது.
இந்த மூன்று நிறுவனங்களுக்கும் கூட்டாக இந்த ஆண்டு வரிக்கு முந்திய லாபமாக
$34 பில்லியன் அமெரிக்க டாலர் கிடைக்கக்கூடும் என்று அந்த அமைப்பு கூறுகிறது.
"ஏழை நாடுகளில் வெறும்
2 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள நிலையில், சில நிறுவனங்கள் நாளொன்றுக்கு மில்லியன் கணக்கில் லாபம் பார்ப்பது வெட்கக்கேடானது," என்றார் அந்த அமைப்பின் ஆப்பிரிக்க தலைவர் மாசா.
இந்த நிறுவனங்கள் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கொடுத்துள்ளதாகவும் அமைப்பு கூறுகிறது. அஸ்ட்ராஸெனகா, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனங்கள் லாபநோக்கமற்ற வகையில் தடுப்பபூசிகளை விநியோகம் செய்துள்ளன.