வாஷிங்டன்: சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெய்ஜிங்கில் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை அரசதந்திர ரீதியில் புறக்கணிக்கும் அமெரிக்காவின் யோசனையை அந்நாட்டு அரசியல்வாதிகள் வரவேற்றுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனோ அல்லது வேறு அரசாங்க அதிகாரிகளோ பெய்ஜிங் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று வெள்ளை மாளிகையின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சூழ்நிலையை அணுக்கமாகக் கவனித்து வருபவரை மேற்கோள்காட்டி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அரசியல்வாதிகள் பலர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த புறக்கணிப்பு திட்டம், முஸ்லிம் உய்கர் சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவின் அடக்கு முறை குறித்து அமெரிக்கா அறிக்கை வெளியிட வழிவகுக்கும்.
பைடன், சீன அதிபர் ஸி ஆகியோருக்கு இடையிலான மெய்
நிகர் சந்திப்பின்போது இதுகுறித்து பேசப்படவில்லை என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் சொன்னார்.
அரசதந்திர ரீதியிலான புறக்கணிப்பு என்பதால், அமெரிக்க விளையாட்டாளர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
அத்துடன், ஆயுதக் கட்டுப்பாடு குறித்து அமெரிக்காவும் சீனாவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இரு நாட்டு அதிபர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறினார்.
சீனாவின் அணுசக்தி, ஏவுகணைத் தயாரிப்பு ஆகியவை பற்றி வாஷிங்டன் அக்கறை கொண்டிருப்பதை அவர் சுட்டினார்.
ஆனால், அமெரிக்காவும் ரஷ்யாவும் தன்னை விடப் பெருமளவு ஆயுதங்கள் வைத்திருப்பதாக பெய்ஜிங் கூறுகிறது.
இரு நாட்டுத் தலைவர்களும் மெய்நிகர் சந்திப்பின்போது இதுபற்றி பேசியதாகக் கூறப்படு
கிறது.
இதற்கிடையே, செய்தியாளர்கள் மீதான பயண, விசா கட்டுப்பாடுகளை தளர்த்தவும் இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இரு நாடுகளிலிருந்தும் செய்தியாளர்கள் சுதந்திரமாக நுழையவும் வெளியேறவும் இது அனுமதிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
அத்துடன் செய்தியாளர்களுக்கான விசா காலம் மூன்று மாதத்திலிருந்து ஓராண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.