காபூல்: ஆப்கானிஸ்தானின் 9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்காவிட்டால், அகதிகள் குடிபெயர்வது அதிகரிக்கும் என்று தலிபானின் உயர்மட்ட தூதர் எச்சரித்துள்ளார்.
"இதே நிலைமை தொடர்ந்தால், ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் மக்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். அது உலகத்திலேயே பெருமளவில் அகதிகள் வெளியேற காரணமாகும்," என்றார் தலிபான் அமைப்பின் வெளியறவு அமைச்சர்.
இது மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்றும் அவர் சொன்னார்.
தலிபான்களின் கீழ் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பான நாடான உள்ளது என்ற அவர் உற்பத்தி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்யுமாறும் அமெரிக்காவை அவர் வலியுறுத்தினார்.
ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் சீராக இல்லாத இச்சமயத்தில், அதை நிலைநிறுத்த தலிபான் அமைப்பு போராடி வருகிறது.
ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக உலக உணவுத் திட்ட அமைப்பு கூறியுள்ளது.