ஆக்லாந்தில் உள்நாட்டு எல்லை திறப்பு
வெலிங்டன்: நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரம் டிசம்பர் 15ஆம் தேதி முதல் உள்நாட்டு எல்லையைத் திறக்கவுள்ளது. உள்நாட்டுப் பயணிகள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாகவும் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும். ஆக்லாந்து, நாடு முழுவதிலும் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால், பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கூறினார். வெளிநாட்டுப் பயணிகள் அனுமதிக்கப்படுவது குறித்து இவ்வாண்டு இறுதிக்குள் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் சொன்னார்.
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் தொற்று; மீண்டும் பயணக் கட்டுப்பாடு
டார்வின்: ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் பயணக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. அப்பகுதியில் பூர்வகுடியினர் ஆறு பேருக்குத் தொற்று பரவியுள்ளதைத் தொடர்ந்து இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை 6 மணி வரை முடக்கநிலை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் நார்தன் டெரிடரி பகுதியினர் முகக்கவசம் அணியவேண்டும் என்ற கட்டுப்பாடும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 81 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் உட்புற ஊர்களில் அந்த விகிதம் 59 விழுக்காடாகவே உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கிருமித்தொற்று எண்ணிக்கை புதிய உச்சம்
பாரிஸ்: பல ஐரோப்பிய நாடுகளில் கிருமித்தொற்று சம்பவங்கள் ஆக அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. ஆஸ்திரியாவில் முதல்முறையாக 14,000த்திற்கும் மேற்பட்ட தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஜெர்மனியில் நேற்று தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை மீண்டும் 50,000த்தைத் தாண்டியது. ஹங்கேரி, செக் குடியரசுகளிலும் 10,000, 20,000த்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு ஆளாகினர். ஐரோப்பாவில் மோசமடைந்து வரும் இந்நிலையைக் கண்டு அமெரிக்கா, உள்ளிட்ட மற்ற நாடுகள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறினர்.
தும்பிக்கை துண்டிக்கப்பட்ட
ஒரு வயது யானை உயிரிழந்தது
பண்டா அச்சே: வேட்டைக்காரர்கள் வைத்த கண்ணியில் சிக்கிய ஒரு வயது சுமத்ரா யானையின் உயிரைக் காப்பாற்ற வனவிலங்கு அதிகாரிகளும் மருத்துவர்களும் அதன் தும்பிக்கையை நீக்கினர். ஆனால் அந்த யானை நேற்று உயிரிழந்துவிட்டது.
"மோசமாகக் காயமடைந்த அந்த யானையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை," என்று வனத்துறை அதிகாரி அரியண்டோ சொன்னார்.

