பேங்காக்: அடுத்த மாதம் முதல் கூடுதலான வெளிநாட்டு ஊழியர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்க தாய்லாந்து திட்டமிட்டுள்ளது. உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் ஏற்பட்டுள்ள மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்க தாய்லாந்து இந்நடவடிக்கையை எடுக்கிறது.
கொவிட்-19 நெருக்கடியிலிருந்து மீண்டுவரத் தொடங்கியிருக்கும் இந்நாட்டின் பொருளியல் மனிதவளப் பற்றாக்குறையால் சவால்களைச் சந்திக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சட்டவிரோதமாக வேலை செய்யும் ஊழியர்கள் தங்களைப் பதிவுசெய்துகொள்ள தாய்லாந்து இம்மாத இறுதிவரை கால அவகாசம் வழங்குகிறது. மியன்மார், கம்போடியோ போன்ற அண்டை நாடுகளிலிருந்து மேலும் எத்தனை பேரை அனுமதிப்பது என்பதைக் கணிக்க இவ்வாறு செய்யப்படுகிறது. சுமார் 100,000 பேர் கணக்கில் இடம்பெறுவர் எனத் தான் எதிர்பார்ப்பதாக தாய்லாந்தின் தொழிலாளர் அமைச்சர் சுச்சார்ட் சொம்கிலின் தெரிவித்தார். கூடுதலாகக் கிட்டத்தட்ட 300,000 ஊழியர்கள் தேவைப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் தொடங்குவதற்கு முன்பு தாய்லாந்தில் சுமார் 2.5 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் இருந்தனர். கிருமிப் பரவல் சூழல் உருவெடுக்கத் தொடங்கிய பிறகு இவர்களில் குறைந்தது ஐந்தில் ஒரு பங்கினர் நாட்டிலிருந்து வெளியேறினர்.
தாய்லாந்தின் பொருளியல் 20 ஆண்டுகளுக்கும் மேல் காணாத அளவில் சென்ற ஆண்டு 6.1 விழுக்காடு குறைந்தது. இவ்வாண்டு, அது சுமார் 1.2 விழுக்காடு வளர்ச்சியடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் உற்பத்தி நிறுவனங்களுக்குக் குறைந்தது 500,000 வெளிநாட்டு ஊழியர்கள் தேவை என்று அதன் தொழில்துறைகள் சம்மேளனம் கூறியுள்ளது. குறிப்பாகக் கட்டுமான, உணவுத் துறைகளில் சம்மேளனம் கவனம் செலுத்துகிறது. அண்டை நாடுகளுடன் இருக்கும் இணக்கக் குறிப்புகளின் அடிப்படையில் கூடுதலான ஊழியர்களைத் தருவிக்க தாய்லாந்து எண்ணம் கொண்டுள்ளது. ஊழியர்கள் அதிபட்சமாக 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள நேரிடலாம்.

