விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

2 mins read
bb486b68-bd74-42fb-95c4-bac7d0721765
-

ஜோசஃப் ஸ்கூலிங் தந்தை மரணம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் நீச்சல் வீரரான ஜோசஃப் ஸ்கூலிங்கின் தந்தை கோலின் ஸ்கூலிங் (படம்) மாண்டார். இவருக்கு வயது 73. முன்னாள் தேசிய சாஃப்ட்பால் விளையாட்டாளரும் ஓய்வுபெற்ற வர்த்தகருமான திரு கோலினுக்குக் கடந்த ஜூன் மாதம் கல்லீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதற்குப் பிறகு இவர் சிகிச்சை பெற்று வந்தார். திரு கோலின், பல திறமைகளைக் கொண்ட ஒரு விளையாட்டாளர்.

ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்ற முதல் சிங்கப்பூரரான லோய்ட் வால்பர்க் இவரது உறவினர். தனது தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தோருக்கு இன்ஸ்டகிராம் வாயிலாக நன்றி தெரிவித்துக்கொண்டார் ஜோசஃப் ஸ்கூலிங்.

மனவலியைப் பகிர்ந்து மாற்றம்

கொண்டுவர எண்ணும் அசீம் ரஃபீக்

லண்டன்: இனரீதியாகத் தான் தவறாக நடத்தப்பட்டதைப் பகிர்ந்துகொண்டது விளையாட்டு உலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்திலும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்று கிரிக்கெட் வீரர் அசீம் ரஃபீக் கூறியுள்ளார். இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாட்டில் இனரீதியாகப் பாரபட்சம் காட்டும் போக்கு ஊறிப்போய் இருப்பதாகக் கடந்த செவ்வாய்க்கிழமையன்று 30 வயது ரஃபீக் தெரிவித்தார்.

தனது அனுபவத்தைத் தெளிவாகத் தெரியப்படுத்தியதால் தான் பெரிதும் நிம்மதியாக இருப்பதாக அவர் கூறினார். "இந்த விளையாட்டும் சமுதாயமும் எனது அனுபவங்களைக் கேட்டு இத்தருணத்தை மறக்காமல் வருங்காலத்தில் மாற்றத்தைக் கொண்டுவர இதைப் பயன்படுத்துவது முக்கியம்," என்றார் முன்னதாக இங்கிலாந்தின் யோக்‌ஷியர் அணிக்கு விளையாடிய ரஃபீக்.

தவறு இழைத்ததால் நடுவர்கள்

தற்காலிகப் பணிநீக்கம்

புயூனஸ் ஏர்்ஸ்: பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தின் நடுவர்கள் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆட்டத்தில் மோசமான தவறுகளை இழைத்ததால் நடுவர் ஆண்ட்ரஸ் இஸ்மாயெல் சோக்கா வார்காஸ், 'விஏஆர்' எனப்படும் காணொளி மூலம் முடிவுகளை எடுக்க உதவும் துணை நடுவராக இருந்த எஸ்டபான் டானியல் ஒஸ்டொஜிஹ் வேகா இருவருக்கும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

கோலின்றி சமநிலையில் முடிந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் நிக்கொலா ஒட்டாமெண்டி, பிரேசிலின் ரஃபின்யாவின் முகத்தைத் தனது முழங்கையால் குத்தியதாகச் சொல்லப்படுகிறது. இச்சம்பவத்திற்குப் பிறகு ரஃபின்யாவின் வாயிலிருந்து ரத்தம் வந்தது. ஆட்டத்தில் ஒட்டாமெண்டிக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படவில்லை.

ஓல்ட் டிராஃபர்ட் அரங்க வன்முறை: மேலும் 10 பேர் கைது

மான்செஸ்டர்: இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட்டுக்குச் சொந்தமான ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்டரங்கில் வெடித்த வன்முறையின் தொடர்பில் மேலும் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் வெடித்த வன்முறையால் அன்று யுனைடெட்டுக்கும் லிவர்பூலுக்கும் இடையே நடைபெறவிருந்த லீக் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

யுனைடெட்டின் உரிமையாளர்களான கிளேசர் குடும்பத்தினருக்கு எதிராக அணியின் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கைதான 10 பேரும் 20லிருந்து 51 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இதுவரை மொத்தம் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.