மணிலா: மணிலாவின் இரண்டு படகுகளை வழி மறித்து அவற்றின்மீது தண்ணீர் பீய்ச்சி அடித்த சீனாவின் மூன்று கடலோரக் காவல்துறைக் கப்பல்களுக்கு எதிராக பிலிப்பீன்ஸ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளதென அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. சம்பவத்தின்போது அப்படகுகள் தென் சீனக் கடலில் பிலிப்பீன்ஸ் உரிமை கொண்டாடும் செக்கண்ட் தாமஸ் ஷோலுக்குச் சென்றுகொண்டிருந்தன.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று நிகழ்ந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பிலிப்பீன்ஸின் வெளியுறவு அமைச்சர் டியோடோரோ லொக்சின் சொன்னார். எனினும் படகுகள் ஈடுபடுத்தப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய நேரிட்டது. அவை, செக்கண்ட் தாமஸ் ஷோலில் இருக்கும் ராணுவப் படையினருக்கு உணவு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. பிலிப்பீன்ஸின் கண்டனத்தை முடிந்தவரை ஆகக் கடுமையான முறையில் மணிலாவுக்கான சீனத் தூதரிடம் தெரியப்படுத்தியதாகத் திரு லொக்சின் கூறினார். பெய்ஜிங் அதன் நடத்தையைக் கட்டுப்படுத்திக்கொள்ளாவிட்டால் தனிச் சிறப்பு வாய்ந்த இருநாட்டு உறவு பாதிப்படையக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

