லண்டன்: உலகில் ஐரோப்பாவில் மட்டும்தான் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அக்கண்டத்தில் கிருமித்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை ஐந்து விழுக்காடு அதிகரித்ததாக நிறுவனம் குறிப்பிட்டது.
கடந்த வாரம் உலகில் கிருமித்தொற்று ஏற்பட்ட 50,000 பேர் மரணமடைந்தனர். ஐரோப்பாவைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் மாண்டோரின் எண்ணிக்கை குறைந்தது அல்லது அதே அளவில் இருந்தது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் சொன்னது.
ஐரோப்பாவில் கடந்த வாரம் கிருமித்தொற்று ஏற்பட்ட 28,304 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் புதிதாக 3.3 மில்லியன் பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர்களில் 2.1 மில்லியன் பேர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். ஜெர்மனி, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகளில்தான் ஆக அதிகமானோரிடையே கிருமி பரவியதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிட்டது. ஜெர்மனியில் கிருமிப் பரவலால் மருத்துவர்களும் மருத்துவ உதவியாளர்களும் பெரும் நெருக்குதலுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, ஆசிய நாடான தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவில் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிகளின் ஆற்றல் குறைந்து வருவதால் அதிகம் நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது.
தென்கொரியாவில் பெரியவர்களில் 78.5 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரியவர்களில் 90 விழுக்காட்டினருக்கும் மேல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.