பிரசல்ஸ்: பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வகைசெய்யும் விதிமுறைகளை வரைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசியல் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக 'ஃபைனான்ஷியல் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது. இதற்கு வழிவகுக்கும் 'டிஜிட்டல் மார்க்கெட்ஸ் ஏக்ட்' எனப்படும் மின்னிலக்கச் சந்தை சட்டத்தை வரையத் திட்டமிடப்பட்டுள்ளது. மின்னிலக்கப் பொருளியலில் போட்டித்தன்மையைத் தடுக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகளைக் குறைப்பது இச்சட்டத்தின் இலக்கு.
முன்பு எதிர்பார்த்ததைவிட மேலும் சில நிறுவனங்கள் இந்தச் சட்டத்தில் சம்பந்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டத்தை அடுத்த ஆண்டு செயல்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
ஓர் இணையச் சேவையையாவது வழங்கும் சொத்துச் சந்தையில் குறைந்தது 80 பில்லியன் யூரோ (123 பில்லியன் வெள்ளி) மதிப்புபெறும் நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தம் பொருந்தும். ஆப்பிள், அமேசான், அண்மையில் பெயர் மாற்றம் கண்ட ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், கூகல் சேவைகளுக்குச் சொந்தமான அல்ஃபபெட் உள்ளிட்ட நிறுவனங்கள் பாதிக்கப்படும். அடுத்த வாரம் வியாக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அமைச்சர்கள் சட்டத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பர். அதற்குப் பிறகு அதன் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.