வாஷிங்டன்: அமெரிக்காவில் மருந்தை அதிகமாக உட்கொண்டதால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இவ்வாறு மாண்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 100,000ஐத் தாண்டியுள்ளது. இது, பெரும் வருத்தத்தைத் தரும் புள்ளி விவரம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். கொவிட்-19 கிருமிப் பரவல் சூழல் இப்பிரச்சினையை மோசமடையச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த எண்ணிக்கை, இதற்கு முன்பிருந்த ஓராண்டு காலத்தில் பதிவானதைக் காட்டிலும் 28.5 விழுக்காடு அதிகம் என்று அமெரிக்காவின் 'சிடிசி' எனப்படும் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் தெரிவித்தது. இதன் தொடர்பில் ஆபத்து விளைவிக்கக்கூடிய 'ஓப்பியோய்ட்' மருந்தை அதிகமாக உட்கொண்டோருக்கு உதவும் 'நாலோக்சோன்' மருந்தை மக்கள் எளிதில் பெற வகைசெய்யவேண்டும். தனது அரசாங்கம் அமெரிக்க மாநிலங்களை அதைச் செய்யவைக்கும் எனத் திரு பைடன் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் அண்மைக் காலமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மேலும் பல மருந்துகளை மக்களால் சாலைகளில் எளிதில் வாங்கவும் முடிவதாகவும் சொல்லப்படுகிறது.

