கோலாலம்பூர்: மலேசியாவின் சிலாங்கூர் மாநலத்தில் உள்ள சுங்கை பூலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஆகக் கடைசி நிலவரப்படி 96 விழுக்காட்டுப் படுக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதை முன்னிட்டு இந்நிலை உருவெடுத்துள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியின் சுற்று வட்டாரத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகளிலிருந்து கொவிட்-19 நோயாளிகளை அனுமதித்துவருவதால் தனது அவசர சிகிச்சை பிரிவில் இவ்வாறு நிகழ்ந்துள்ளதாக சிலாங்கூரின் சுகாதார இயக்குநர் டாக்டர் ஷ'ஆரி ங்காடிமான் சொன்னார்.
இதற்கிடையே, மலேசியாவில் சினோவேக், ஆஸ்ட்ராசெனகா பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு 'டிசிஏ' எனப்படும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் நிபந்தனைக்கு உட்பட்ட அனுமதியை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 18 வயதுக்கும் மேலானோருக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

