ஜகார்த்தா: இவ்வாண்டின் இறுதியில் பல்வேறு கொண்டாட்டங்கள் வருவதால் விடுமுறைக் கால கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த இந்தோனீசிய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறது.
பொதுமக்களின் நடமாட்டத்தை சிறந்த வகையில் நிர்வகிக்க 3வது நிலை கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மனிதவள, கலாசார ஒருங்கிணைப்பு அமைச்சர் முஹாட்ஜிர் எஃபண்டி தெரிவித்தார்.
இது குறித்த விவரம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றார் அவர்.
டிசம்பர் 24 முதல் ஜனவரி 2 வரை புதிய விதிமுறைகள் அமலில் இருக்கும்.
ஒவ்வொரு மாநிலமும் தேசிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜாவா, பாலிக்கு உள்ளேயும் வெளியேயும் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படவிருக்கிறது.
புத்தாண்டை வரவேற்கும் வாண வேடிக்கை, அணிவகுப்புகள் போன்ற நடவடிக்கைகள், மக்களை பெருமளவில் ஈர்க்கும் நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு புதிய விதிமுறையின் கீழ் தடை செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது.
கிறிஸ்மஸ் நாள் சிறப்பு பிரார்த்தனைகள் உள்ளிட்ட சமய நிகழ்ச்சிகளுக்கு 3வது நிலை கட்டுப் பாடுகள் போடப்படும். இதனால் வழக்கமானதைவிட பாதியளவு மக்களே சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும்.
மேலும் கடைத் தொகுதிகள், ஹோட்டல்கள், உணவகங்கள், பேரங்காடிகளில் 50 விழுக்காடு மக்களே அனுமதிக்கப்படுவர். பெருமளவில் மக்கள் கூடும் கவர்ச்சித் தலங்கள் மூடப்படும். உள்ளூர் பயணங்கள் அனுமதிக்கப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது முழுமையாக தடுப்பூசி போட்டுள்ள பயணிகள் ஜாவா மற்றும் பாலிக்குச் சென்றுவர அனுமதிக்கப்படுகின்றனர்.

