வியட்னாமில் வர்த்தகங்கள்
மீண்டும் மூடல்
ஹோ சி மின்: வியட்னாமின் வர்த்தக மையமான ஹோ சி மின் சிட்டியில் புதிய தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பால் மதுபானக் கூடங்கள், உடற்பிடிப்பு மற்றும் கரவோக்கே நிலையங்களை மீண்டும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 16ஆம் தேதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொழுதுபோக்கு நிலையங்கள் ெசயல்பட அனு மதிக்கப்பட்டது. ஆனால் இரண்டு நாட்களுக்குள்ளாகவே தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. "அபாயம் மறைந்திருப்பதால் கிருமிப் பரவலைக் கண்டுப்பிடிப்பது சவாலாக உள்ளது," என்று நகரத்தின் அதிகாரபூர்வ இணையப்பக்கம் தெரிவித்தது.
ஆடவருக்கு S$42,500 அபராதம்
பெய்ஜிங்: சீனாவில் கிருமித்தொற்றை மறைத்த ஆடவருக்கு 200,0000 யுவான் (S$42,500) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட தண்டனையும் அவருக்கு விதிக்கப் பட்டதாக புளூம்பெர்க் தெரிவித்தது. வியட்னாமுக்கு வர்த்தகப் பயணம் மேற்கொண்ட காவோ என்ற அந்த வாலிபர், கொவிட்-19 நோயாளிகள் தங்கியிருந்த ஹோட்டலில் தங்கியதாகவும் அவருக்கு காய்ச்சல் மற்றும் கொவிட்-19 அறிகுறிகள் ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வியட்னாம் எல்லை யோரமுள்ள குவாங்ஸியில் உள்ள நீதிமன்றம்,
அவருக்கு அபராதத்தையும் சிறைத் தண்டனையையும் விதித்தது.
தொற்று; விமானிகள் நீக்கம்
ஹாங்காங்: ஹாங்காங்கின் கேத்தே பசிஃபிக் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று விமானிகள், கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டதால் பணியிலிருந்து நீக்கப் பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்தபோது விமான ஊழியர்களுக்கான விதிமுறைகளை அவர்கள் மீறியதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இந்தத் தகவலை முதலில் வெளியிட்ட சவுத் சைனா மார்னிங் போஸ்ட், ஜெர்மனியில் ஹோட்டலில் தங்கியிருந்த மூவரும் வெளியேறி யதாகக் கூறியது. இதனால் மூவருக்கும் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து விமானிகள், விமானச் சிப்பந்திகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
வூஹானில் முதல் தொற்று
வூஹான்: சீனாவின் வூஹான் சந்தையில் கடலுணவு விற்ற பெண் வியாபாரிக்குத்தான் முதல் முறையாக கொவிட்-19 தொற்று ஏற்பட்டது என்று அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் மைக்கல் வோரோபே கண்டுபிடித்துள்ளார். இதற்கு முன்பு அதே நகரத்தைச் சேர்ந்த கணக்காளர் ஒருவருக்கு முதலில் கிருமித்தொற்று ஏற்பட்டதாக நம்பப்பட்டது.

