கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமரான நஜிப், அரசாங்கம் தனக்கு வெகுமதியாக வழங்கிய நிலம், வீட்டை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
கோலாலம்பூரில் சுமார் 100 மில்லியன் (32.5 மி வெள்ளி) ரிங்கிட் மதிப்புள்ள நிலம், வீட்டை அவருக்கு அரசாங்கம் பரிசாக வழங்கு வதாகக் கூறப்பட்டது.
பிரதமராக அவர் சேவையாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் அந்தப் பரிசு வழங்கப்படுவதாகவும் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தன.
கொள்ளைநோய் பிடியில் நாடு சிக்கியிருக்கும் வேளையில் அவருக்குப் பரிசு வழங்குவது தேவையா என மக்களும் எரிச்சலடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அரசாங்கம் அளித்துள்ள பரிசை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று திரு நஜிப் கூறியுள்ளார்.
"முன்னாள் பிரதமரமாக இருந்ததன் அடிப்படையில் வழங்கப்பட்டாலும் வெகுமதியை நிராகரிக்க முடிவு செய்துள்ளேன்," என்றார் அவர்.
"மக்கள் சிரமமான காலகட்டத்தில் இருப்பதை நான் அறிவேன். இந்நேரத்தில் நாட்டின் கவனம் மக்கள் மீது இருக்க வேண்டும். வரும் சனிக்கிழமை நடைெபறும் மலாக்கா தேர்தலில் இது ஒரு சர்ச்சைக்குரிய விவாதமாக மாறக் கூடாது," என்று திரு நஜிப் தெரி வித்தார்.
1எம்டிபி நிதி ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது அவரது மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் அவருக்கு அரசாங்கம் வெகுமதி வழங்கியிருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

