2வது தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி

2வது தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி

2 mins read
882df403-1a20-4c37-bbbf-8345acc26704
'டெல்டா' வகை கொரோனா கிருமி வீரியமிக்கதாக இருப்பதால் மூன்றாவது, பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வலியுறுத்தியுள்ளார்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தொற்றுக்கெதிரான பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தகுதிபெற்றவர்கள், இரண்டு தவணை தடுப்பூசியைப் போட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகு அதனைப் போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை, வரும் 24ஆம் தேதி புதன்கிழமையில் இருந்து நடப்பிற்கு வரவுள்ளது.

இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில், மக்கள்தொகையில் பாதிப்பேர் இந்த ஆண்டு முடிவில் பூஸ்டர் தடுப்பசியைப் போட்டுக்கொள்ள முடியும்.

பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான கால இடைவெளியை அனைத்து வயதுப் பிரிவினர்க்கும் ஐந்து மாதமாக ஆக்கலாம் என்று கொவிட்-19 தடுப்பூசி வல்லுநர்கள் குழு பரிந்துரைத்து இருப்பதாக கொவிட்-19 தொற்றுக்கெதிரான பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு ஓங் குறிப்பிட்டார்.

இந்தக் கால இடைவெளி 30 முதல் 59 வயதிற்குட்பட்டோர்க்கு இதுவரை ஆறு மாதங்களாகவும் 60 மற்றும் அதற்குமேல் வயதுடையோர்க்கு ஐந்து மாதங்களாகவும் இருந்தது என்று திரு ஓங், இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இந்தக் கால இடைவெளி மாற்றம் காரணமாக இப்போது முதல் வரும் டிசம்பர்வரை ஏறத்தாழ 1.5 மில்லியன் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுவிடலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

'டெல்டா' வகை கொரோனா கிருமி வீரியமிக்கதாக இருப்பதால் மூன்றாவது, பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் என்று திரு ஓங் வலியுறுத்தினார்.

பூஸ்டர் தடுப்பூசிக்குத் தகுதிபெறுவோர்க்கு குறுஞ்செய்தி மூலம் அழைப்பு விடுக்கப்படும்.

தகுதி பெற்ற்றுள்ளோரில் எவருக்கேனும் குறுஞ்செய்தி வரவில்லை என்றால் அவர்கள் முன்பதிவின்றி, மொடர்னா தடுப்பூசி நிலையத்திற்கு நேரே சென்று பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.