இரண்டு பேரைக் கொன்ற குற்றச்சாட்டுகளிலிருந்து அமெரிக்க இளையர் விடுவிப்பு
நியூயார்க்: அமெரிக்காவில் இன வெறிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் இரண்டு பேரைச் சுட்டுக்கொன்ற கைல் ரிட்டன்ஹவுஸ் எனும் 18 வயது இளையர் குற்றவாளி அல்ல என்ற தீர்ப்புடன் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் மீது சுமத்தப்பட்ட இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள், கொலை முயற்சி, போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது என அனைத்து விதமான வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
நீதி வென்றுவிட்டது என்று கூறும் குடியரசு கட்சியினர் இத்தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள விஸ்கான்சின் செனட்டர் ரான் ஜான்சன், நீதி கிடைத்துவிட்டது என்றார்.
நியூஜெர்சியின் முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி, "நீதி அமைப்பின் மீதான் நம்பிக்கை புத்துயிர் பெற்றுள்ளது," என்றார்.
ஜனநாயகக் கட்சியினரோ வன்
முறைக்கு ஆதரவான தீர்ப்பு என்று கூறியுள்ளனர்.
கலிஃபோர்னியாவின் ஆளுநர் கவின் நியூசோம், "மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பது போல் உள்ளது," என்றார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனோ, "ரிட்டன்ஹவுசின் விடுதலை, நான் உட்பட பல அமெரிக்கர்களுக்கு கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தும்," என்றார்.
ஆனால் நீதிபதியின் தீர்ப்பை மதிப்பதாகவும் அவர் சொன்னார். அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதியாக இருக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி கெனோஷாவில் கறுப்பின ஜேக்கப் பிளேக் கொல்லப்பட்டதற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது ரிட்டன்ஹவுஸ் இரண்டு பேரைச் சுட்டுக்கொன்றார்.
இதுதொடர்பான வழக்குவிவாதத்தின்போது, தான் எந்த சண்டையையும் தொடங்கவில்லை என்றும் எதிராளி தன்னை தாக்க முயன்றதால், தற்காப்புக்காக தான் சுட்டுவிட்டதாக ரிட்டன்ஹவுஸ் நீதிமன்றத்தில் கூறினார்.