ஹாங்காங்கில் 3 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோவேக்
ஹாங்காங்: சீனாவின் சினோவேக் தடுப்பூசியை 3 முதல்
17 வயதுக்கு உட்பட்டவர்களுக்குச் செலுத்த ஹாங்காங் அனுமதி அளித்துள்ளது. 12 முதல் 17 வயதுடையவர் களுக்குத் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் 3 முதல் 11 வயதுடையவர்களுக்கு அடுத்த கட்டத்தில் தடுப்பூசி போடப்படும் என்றும் சொன்னார் அதன் உணவு மற்றும் சுகாதாரத் துறையின் செயலாளர். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் மாணவர்கள் கூடிய விரைவில் பள்ளிக்கூடத்திற்கும் அன்றாட வாழ்க்கைக்கும் திரும்ப முடியும் என்று அவர் சொன்னார்.
'இறுதிக்கட்டத்தில் கிருமிப் பரவல்'
ஹாங்காங்: சீனாவில் தற்போதைய கிருமிப் பரவலின் அலை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட எட்டு மாநிலங்களில் கடந்த 14 நாட்களாக புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மி ஃபெங் சொன்னார். இதற்கிடையே, சீனாவில் 76.3 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக மற்றோர் அதிகாரி கூறினார்.
150,000 லிட்டர் டீசல் கடத்தல்; ஈரான் கடற்படையினர் முறியடிப்பு
தெஹ்ரான்: வளைகுடாவில் டீசல் கடத்திய படகு ஒன்றை பறிமுதல் செய்ததோடு 11 பேரைக் கைது செய்துள்ளதாக ஈரான் புரட்சிப்படையின் கடற்படையினர் கூறியுள்ளனர். தங்களது உளவுப்படையின் உதவியோடு கடத்தலைத் தடுக்க முடிந்தது என்றார் படைத்தலைவர் அகமது ஹஜியன்.
கிட்டத்தட்ட 150,000 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டதாக சொன்ன அவர், படகு எந்த நாட்டைச் சேர்ந்தது, கைது செய்யப்பட்டவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது உள்ளிட்ட வேறு எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை.
கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கார்களுக்குத் தீ வைத்தும் போலிசார் மீது கற்களை வீசியும் தாக்கினர்.
எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்ல எச்சரிக்கை விடுக்கும் வகையில் போலிசார் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலிசார் கூறினர். கிருமிப் பரவல் மீண்டும் தலைதூக்கியதையடுத்து நெதர்லாந்தில் சென்ற வாரம் மூன்று வாரங்களுக்கு முடக்கநிலை அறிவிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் தலைவர்கள் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்கத் திட்டம்
லண்டன்: சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அரசதந்திர ரீதியில் புறக்கணிப்பது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலித்து வருகிறார். இதன்படி பிரட்டிஷ் தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்றாலும் சீனாவுக்கான பிரிட்டிஷ் தூதர் அதில் கலந்துகொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.

