மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் கட்டாயத் தடுப்பூசிக்கு எதிராக பெரும்பாலானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதேசமயம்
கொவிட்-19க்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தும் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் குறிப்பிட்ட சில வேலை
களுக்குச் செல்வதற்கும் உணவகங்களில் உணவருந்துவதற்கும் ஆஸ்திரேலியாவின் மாநில அரசு கள் சில தடை விதித்துள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாகவே அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருந்தாலும் மெல்பர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டங்களில் மேலும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
அதேசமயம் இனவெறி, பாசிசத்திற்கு எதிரான பிரச்சாரக் குழுவினர் மெல்பர்னில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி ஆதரவுப் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே, தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் ஆஸ்திரேலியாவில் அதிகமாக இருந்தாலும், அடுத்த ஆறு மாதங்களில் தாங்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்று 40 விழுக்காட்டு ஆஸ்திரேலியர்கள் எண்ணுவதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவவந்துள்ளது. சென்ற ஏப்ரல் மாதக் கருத்துக்கணிப்பில் வெறும் 10.1 விழுக்காட்டினரே இவ்வாறு கூறியிருந்தனர்.
ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டி: வீரர்களுக்குத் தடுப்பூசி கட்டாயம்
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுவிருது டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து விளையாட்டாளர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று போட்டிக்கான இயக்குநர் கிரேக் டிலே உறுதிபடுத்தினார்.
ஆஸ்திரேலிய பொதுவிருது போட்டியை ஒன்பது முறை வென்றுள்ள ஜோகோவிச், தடுப்பூசி போட்டுக்கொண்டாரா என்பது தெளிவாக தெரியாத நிலையில், அவர் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.