புதுடெல்லி: மக்களுக்கு கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட இந்தியாவிடம் இப்போதைக்குத் திட்டம் எதுவும் இல்லை என்று விவரம் அறிந்த மூன்று தரப்புகள் கூறியுள்ளன.
இரண்டு முறை தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது போதுமான பாதுகாப்பு தருகிறது என்று அரசாங்கம் நம்புவதாக அத்தரப்புகள் தெரிவித்தன.
பல மேற்கத்திய நாடுகள் செய்ததைப்போல, கிருமித்தொற்றால் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்க பொதுச் சுகாதார நிபுணர்கள் இந்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளன.
எனினும், இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய 944 மில்லியன் பேருக்கு எதிர்வரும் ஜனவரிக்குள் இரண்டு தவணை தடுப்பூசித் திட்டத்தை நிறைவுசெய்வதிலேயே அதிகாரிகள் கவனம் செலுத்துவர் என்று விவரம் அறிந்த அந்தத் தரப்புகள் தெரிவித்தன.
அதன் பின்னர், வெளிநாடுகளுக்குத் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் அவர்களது கவனம் திரும்பும்.
இந்தியாவில் இதுவரை 81 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு தடுப்பூசியையாவது போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களில் 43 விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுவிட்டனர்.
பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்களுக்கு தடுப்பூசித் திட்டம் இன்னும் தொடங்கவில்லை.
"பெரியவர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசியைப் போட்டு முடிப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது," என்று விவரம் அறிந்த ஒரு தரப்பு கூறியது.
"பெரும்பகுதியினரை இயல்பாகவே கிருமி தொற்றிவிட்டது. அவர்களுக்கு இரண்டு தடுப்பூசி போதுமானது. எனவேதான், விழாக்காலத்திற்குப் பிறகும் தொற்று அதிகரிக்கவில்லை என்பதை நாங்கள் கவனித்தோம்," என்று அந்தத் தரப்பு கூறியது.
கொள்கை வகுப்பவர்கள் இந்த விவகாரம் குறித்து இன்னும் கலந்தாலோசித்து வருவதால், இதுகுறித்து விவரம் அறிந்த அந்தத் தரப்புகள் தங்களது பெயர்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

