பாக்தாத்: ஆடவர் ஒருவர், 12 வயது சிறுமி உடனான திருமணத்தை முறைப்படுத்த அனுமதிக்கும் நோக்கில், ஈராக்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று அதுகுறித்த வழக்கு விசாரணையை நேற்று (நவம்பர் 21) ஒத்திவைத்தது.
அந்தச் சிறுமியின் தாயாரைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் ஒருவர் இதனைத் தெரிவித்தார். மகளின் திருமணத்திற்கு அச்சிறுமியின் தாயார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஈராக்கியத் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு நீதிமன்றத்துக்கு வெளியே பதாகைகளை ஏந்திய உரிமை ஆர்வலர்கள், அச்சிறுமியின் திருமணத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“வயது குறைந்தவர்களின் திருமணம், குழந்தைப்பருவத்திற்கு எதிரான குற்றமாகும்,” என்று பதாகைகளில் எழுதப்பட்டிருந்தது.
இந்த மாதம் 28ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் மர்வான் ஒபைடி தெரிவித்தார்.
ஈராக்கில் சட்டப்படி திருமணம் செய்துகொள்வதற்கான குறைந்தபட்ச வயது 18. ஆனால், பெற்றோர் அல்லது நீதிமன்றத்தின் அனுமதி வழங்கப்படும் வழக்குகளில் இந்த வயது 15ஆகக் குறையலாம்.
பெயர் குறிப்பிட விரும்பாத அந்தச் சிறுமியின் தாயார், தம் மகள் இஸ்ரா “சீரழிக்கப்பட்டதாகவும்” அவளுடைய தந்தை அவளைக் கடத்தியதாகவும் சொன்னார்.
எனினும், மாதர்களுக்கு எதிரான வன்முறையைக் கையாளும் உள்துறை அமைச்சைச் சேர்ந்த பிரிவு ஒன்று, இதன் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இஸ்ரா, அவளுடைய தந்தை, கணவர் ஆகியோரை தான் சந்தித்ததாகவும் திருமண ஒப்பந்தத்தை தான் பார்த்ததாகவும் அப்பிரிவு கூறியது. திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்க தம்மை எவரும் வலுக்கட்டாயப்படுத்தவில்லை என்று அச்சிறுமி கூறியதாக அப்பிரிவு தெரிவித்தது.