அண்மையில் மலாக்காவில் நடந்த சட்டமன்றத் தேர்தலால் மலேசியாவில் கொவிட்-19 நான்காவது அலை உருவாக வாய்ப்புள்ளதாகச் சுகாதார வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர்.
அப்படி நான்காவது அலை உருவானால், 'டெல்டா' போன்ற உருமாறிய கிருமிகளாலேயே அதிக பாதிப்பு ஏற்படலாம் என்றும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் இறப்பு விகிதமும் கூடலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மலாக்காவில் நடந்த சட்டமன்றத் தேர்தல் எதிரொலியாக இன்னொரு கொரோனா அலை உருவானால் அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக மலேசிய சுகாதாரத் துணை அமைச்சர் ஏரன் அகோ டகாங் கூறியிருக்கிறார். தேர்தல் முடிந்து 10-14 நாள்களுக்குப் பிறகே விளைவுகள் தெரியவரும் என்று அவர் சொன்னார்.
இதனிடையே, டிசம்பர் 18ஆம் தேதி சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

