வழிப்பறி: சமூக ஊடக பொய்த் தகவலுக்கு ஜோகூர் மறுப்பு

1 mins read
0fb43373-878b-49de-93cc-64101ba59978
ஜோகூரில் குற்றச்செயல்கள் 39.67 விழுக்காடு குறைந்து, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஷஹ்ரில் அஸ்ருல் ஹார் -

ஜோகூர் பாரு: மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நிலவழிப் பயணம் தொடங்கும்போது சிங்கப்பூரர்கள் வழிப்பறியை எதிர்கொள்ள நேரிடும் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலுக்கு ஜோகூர் மாநில போலிசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயத்தில் பொய்த் தகவல்கள், வதந்திகள் அல்லது உறுதிசெய்யப்படாத செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜோகூர் போலிஸ் தலைவர் அயோப் கான் மைதின் பிச்சை தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பரவும் பொய்த் தகவல்களைப் பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜோகூரில் குற்றச்செயல்கள் 39.67 விழுக்காடு குறைந்து, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

அதேபோல, திருட்டுச் சம்பவங்கள் 77.64 விழுக்காடும் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் 51.05 விழுக்காடும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர்-மலேசியா எல்லை மீண்டும் திறக்கப்படும்போது நூற்றுக்கணக்கான திருடர்கள், சிங்கப்பூரிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்காகக் காத்திருப்பதாக சமூக ஊடகங்களில் வலம் வரும் அறிக்கை கூறுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நிலவழி 'விடிஎல்' எனும் தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் வரும் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது.