பாரிஸ்: இங்கிலிஷ் கால்வாயில் நிகழ்ந்த ஆக மோசமான சம்பவம் என்று கூறப்படும் படகு விபத்தில் குறைந்தது 27 அகதிகள் மாண்டுவிட்டனர்.
மூன்று குழந்தைகள், கர்ப்பிணி உட்பட ஏழு பெண்களும் அவர்களில் அடங்குவர்.
படகில் 34 பேர் இருந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இரண்டு பேர் காப்பாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலரைக் காணவில்லை.
அவர்கள் பிரான்சிலிருந்து பிரிட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானும் அவசர பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
ஆள் கடத்தலில் ஈடுபடுவோரைத் தடுக்க அண்டை நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்தின் உதவி கண்டிப்பாக தேவைப்படும் என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
அதேசமயம் ஆள் கடத்தல்காரர்கள் மூலம் பிரான்சைவிட்டு வெளியேறும் படகுகளை நிறுத்துவதற்கு பிரான்ஸ் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரிட்டன் சாடியது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பேசிய பிரான்சின் உள்துறை அமைச்சர் டார்மானின் சட்டபூர்வ ஆவணங்கள் இல்லாமல் அகதிகள் எளிதில் அணுகக்கூடிய வகையிலான பிரிட்டனின் குடிநுழைவு முறையை விமர்சித்தார்.
இது அனைத்துலகப் பிரச்சினை என்ற இமானுவல் மேக்ரான் எல்லை கட்டுப்பாடுகளை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிவேண்டும் என்றார்.