கோலாலம்பூர்: மலேசியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும் கடைக்காரர்கள் சிலர் சுயமாக கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வருகின்றனர்.
கிருமிப் பரவல் காரணமாக நிலவும் நிச்சயமற்ற சூழல், டிசம்பர் மாதத்தில் மலேசியாவில் மீண்டும் கிருமிப் பரவல் தலைதூக்கும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுவது போன்றவற்றின் காரணமாக கிருமிப் பரவல் சூழ்நிலைக்கு ஏற்ப வர்த்தக செயல்முறையை மாற்றிக் கொண்டுள்ளனர் வர்த்தகர்கள்.
உணவகத்தில் அமர்ந்து உண்
பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளபோதும் தனது வாடிக்கையாளர்களுக்கு அந்த அனு பவத்தைத் தர மறுக்கிறார் உணவக உரிமையாளரான செல்வி ஃபாசிலா கம்சா.
மாறாக இணைய விற்பனையிலும் உணவை எடுத்துச் செல்லும் வாடிக்கையாளர்களைக் கவர்வதிலும் கவனம் செலுத்துகிறார்.
டிசம்பரில் கிருமிப் பரவல் மீண்டும் தலைதூக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பே அதற்கு காரணம் என்கிறார் அவர்.
ஆடைகளைப் போட்டு பார்த்து வாங்க அனுமதிப்பதில்லை என்கிறார் துணிக்கடை உரிமையாளரான திருமதி கௌர்.
இதனால் தான் சில வாடிக்கையாளர்களை இழக்கக்கூடும் என்றாலும் இதைக் கண்டிப்பாக பின்பற்றுவதாகச் சொன்ன அவர் கிருமித்தொற்றுக்குத் தனது உறவினரைப் பறிகொடுத்துவிட்டதாகவும் சொன்னார்.

