ஜோகூர் பாரு: மலேசியா-சிங்கப்பூர் நிலவழிப் பயணம் மீண்டும் தொடங்கும்போது சிங்கப்பூரர்கள் வழிப்பறி திருட்டை எதிர்கொள்ள நேரிடும் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலுக்கு ஜோகூர் மாநில போலிசார் மறுப்பு தெரிவித்துள்ள
னர்.
இந்த விஷயத்தில் பொய் தகவல்கள், வதந்திகள் அல்லது உறுதிசெய்யப்படாத செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜோகூர் மாநில போலிஸ் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரவும் பொய் தகவல்களைப் பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜோகூர் மாநிலத்தில் குற்றச் செயல்கள் 39.67 விழுக்காடு குறைந்து, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
அதேபோல் திருட்டு சம்பவங்கள் 77.64 விழுக்காடும் வாகனத் திருட்டு சம்பவங்கள் 51.05 விழுக்காடும் குறைந்துள்ளதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எல்லை மீண்டும் திறக்கப்படும் போது நூற்றுக்கணக்கான திருடர்கள், சிங்கப்பூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை காட்ட காத்திருப்பதாகவும் சமூக ஊடகங்களில் வலம் வரும் தகவல் கூறுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நிலவழி 'விடிஎல்' எனும் தடுப்பூசி பயணத்தட திட்டம் வரும் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது.