ரஷ்ய நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு
மாஸ்கோ: ரஷ்யாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட
தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52ஆக
அதிகரித்தது.
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் லிஸ்ட்வேஸ்னியா பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் காற்றோட்டத்துக்காக அமைக்கப்பட்டு இருந்த குழியின் முகப்பு பகுதியில் படிந்திருந்த நிலக்கரி தூணில் திடீரென பிடித்த தீ சுரங்கத்துக்குள் பரவியது.
அப்போது அங்கு பணியில் இருந்த பல தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 49 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்து தொடர்பாக சுரங்க நிறுவன அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டுப் பயணிகளுக்கு பிலிப்பீன்ஸ் அனுமதி
மணிலா: தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் அனுமதிக்க பிலிப்பீன்ஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அடுத்த மாதத்தின் முதல் 15 நாட்களில் தொற்று அபாயம் குறைவாக உள்ள நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிபரின் செய்தித் தொடர்பாளர் கார்லோ சொன்னார்.
பிரிட்டன், இந்தியா, இந்தோனீசியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் தொற்று அபாயம் குறைவாக உள்ளதாக பிலிப்பீன்ஸ் வகைப்படுத்தியுள்ளது.
ஷங்காயில் மீண்டும் தொற்று
ஷங்காய்: கிருமித்தொற்றை முற்றிலும் துடைத்தொழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள சீனாவின் ஷங்காய் நகரத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அங்கு மூன்று பேருக்கு உள்ளூர் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலா நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் அங்கு பொது போக்குவரத்து சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவும் பயண முகமைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று பள்ளிகள் மூடப்பட்டன. மக்கள் தேவையின்றி நகரத்தைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைய கிருமிப் பரவலை சீனா சில நாட்களுக்கு முன்பு கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், அங்கு மீண்டும் கிருமித்தொற்று தலைதூக்கியுள்ளது.

