விமானக் கட்டணங்களை உடனடியாக குறைக்க வேண்டும்: மலேசிய அமைச்சர்

விமானக் கட்டணங்களை உடனடியாக குறைக்க வேண்டும்: மலேசிய அமைச்சர்

2 mins read
ab3ddafb-60fd-48e6-91d3-4c2155e63a08
சரவாக் மாநிலத்துக்குக் கூடுதல் விமானச் சேவைகளை வழங்க மலேசிய ஏர்லைன்ஸ் உறுதியளித்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

புத்ராஜெயா: நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள், அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் கூறியுள்ளார்.

விமானப் பயணங்களுக்கான தற்போதைய கட்டணம், குறிப்பாக சரவாக் மாநிலத்துக்கான கட்டணம், பயணிகளுக்குப் பெரும் சுமையாக இருக்கிறது என்று அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு இறுதியிலும் அடுத்த ஆண்டு முற்பகுதியிலும் வரும் விடுமுறைக் காலத்தில் விமானப் பயணக் கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என்று பயனீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

"இது அரசாங்கத்திற்கும் கவலையளிக்கிறது. கொள்ளைநோய் காரணமாக நீண்டகாலத்திற்குப் பிறகு குடும்பத்துடன் இணையும் பயணிகளைக் கட்டண உயர்வு வெகுவாகப் பாதிக்கும்," என்று அமைச்சர் வீ கூறினார்.

விமான நிறுவனங்களின் அதிகப்படியான கட்டணம் குறித்து சரவாக்கில் உள்ள அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் அண்மையில் கவலை எழுப்பியிருந்தன.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண விமான நிறுவனங்களுடன் அரசாங்கம் ஆலோசனை நடத்தியுள்ளது.

மலேசிய ஏர்லைன்ஸ், ஏர் ஏஷியா, மலிண்டோ ஏர் ஆகியவற்றுடன் நடந்த கூட்டத்தில் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தப்பட்டது.

சரவாக் மாநிலத்துக்குக் கூடுதல் விமானச் சேவைகளை வழங்க மலேசிய ஏர்லைன்ஸ் உறுதியளித்துள்ளது. இதனால் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது.

மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையமும் கூடுதல் விமானச் சேவைகளுக்கு ஒப்புதல் வழங்கத் தயாராக உள்ளது என்று அமைச்சர் வீ தெரிவித்தார்.

கொள்ளைநோயால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்வதற்காக கட்டணம் உயர்த்தப்படுவதாக மக்கள் நம்புகின்றனர். அத்தகைய எண்ணங்களைப் போக்கும் வகையில் விமானத் துறையினர் கட்டண உயர்வைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் வீ வலியுறுத்தினார்.