கர்நாடக மருத்துவக் கல்லூரியில் 281 மாணவர்களுக்குத் தொற்று; கல்லூரி மூடல்

1 mins read
b92f6699-cd7b-4326-8e87-9c981f83be94
எஸ்டிஎம் மருத்துவக் கல்லூரியில் தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாவர். படம்: இந்திய ஊடகம் -

பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்று, கொவிட்-19 பரவும் மையப் பகுதியாக மீண்டும் உருவெடுத்துள்ளது.

அங்கு பயிலும் மாணவர்களில் மேலும் 77 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களையும் சேர்த்து, அங்கு பாதிக்கப்பட்டுள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 281ஆகக் கூடியுள்ளது.

வட கர்நாடகாவின் மருத்துவ நடுவமாக கருதப்படுகிறது எஸ்டிஎம் மருத்துவக் கல்லூரி. அதன் வளாகத்தில் செயல்படும் மருத்துவமனையில் புதிதாக நோயாளிகளைச் சேர்க்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையின் நுழைவாயிலும் வெளிவாயிலும் மூடப்பட்டுள்ளன. கொவிட்-19 பரிசோதனையில் 'தொற்று இல்லை' என உறுதிப்படுத்தப்படும் உள்நோயாளிகளே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர்.

எஸ்டிஎம் மருத்துவக் கல்லூரியில் தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாவர்.

கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட விழா ஒன்று, கிருமிப் பரவலுக்குக் காரணமாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விழா இரண்டு, மூன்று நாள்களுக்கு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.