செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e778ea34-5420-44da-8cff-386ea39d3415
-

மலேசியாவில் 5,097 பேர் பாதிப்பு

கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 5,097 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். முந்தைய நாள் பாதிக்கப்பட்ட 5,501 பேருடன் ஒப்பிட்டால் தற்போது சற்று குறைந்துள்ளது. புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் இதுவரை 2,619,577 பேர் பாதிக்கப்பட்டனர் என்று நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

'சரவாக் தேர்தலில் பெர்சத்துக்

கட்சி போட்டியிடாது'

மூவார்: அடுத்த மாதம் சரவாக் மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பெர்சத்து கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் முகைதீன் யாசின் நேற்று அறிவித்தார். சரவாக்கின் கபுங்கான் (ஜிபிஎஸ்) கட்சித் தலைவர் அபாங் ஜோஹாரியைச் சந்தித்த பிறகு கட்சி இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

"சில இடங்களில் எங்களால் வெற்றி பெற முடியும். ஆனால் ஜிபிஎஸ் தலைமைத்துவத்தின் விருப்பத்தை மதித்து சரவாக்கில் பெர்சத்து போட்டியிடாது," என்று பெரிக்கத்தான் நேஷனலின் தலைவருமான முகைதீன் கூறினார். பெரிக்கத்தான் தலைமையிலான அரசாங்கத்தில் தாம் பிரதமராக இருந்தபோது ஜிபிஎஸ் வழங்கிய ஆதரவையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜி-20க்கு மூன்று முன்னுரிமைகள்:

இந்தோனீசியா அறிவிப்பு

ஜகார்த்தா: உலகின் ஆகப்பெரிய பொருளியல் நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்புக்கு வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி இந்ேதானீசியா தலைமையேற்கவிருக்கிறது. இந்த நிலையில் அது மூன்று முன்னுரிமைகளை முன்வைத்துள்ளது. உலக சுகாதாரம், எரிசக்தி மாற்றம், மின்னிலக்க உருமாற்றம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்போவதாக இந்தோனீசியா கூறியுள்ளது.

வடக்கு பிரிட்டனில் சூறாவளி

லண்டன்: பிரிட்டனின் வடக்குப் பகுதிகளை சூறாவளி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் நேற்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளிக் கிழமை நடந்த சம்பவத்தில் காரில் சென்றுகொண்டிருந்தவர் மீது மரம் விழுந்ததால் அவர் கொல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

சூறாவளியால் பேரலைகள் எழும் என்பதால் மக்கள் கடற்கரையிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியது. இதனால் வடக்கு இங்கிலாந்தில் உள்ள 55,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.

நியுகேசலின் வடக்கே விரைவு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் சாலைகள் பனியால் மூடப்பட்டன. மரங்களும் விழுந்துகிடந்ததால் இரவு முழுவதும் ஓட்டுநர்கள் வாகனத்திலேயே உறங்க வேண்டியிருந்தது என்று போலிசாரும் சமூக ஊடகங்களும் தெரிவித்தன.