செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
69e4cef4-e253-4221-b641-ebfdc3e64901
-

'அமெரிக்காவில் ஏற்கெனவே

ஓமிக்ரான் இருக்கலாம்'

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏற்கெனவே புதிய உருமாறிய ஓமிக்ரான் கிருமி இருக்கலாம் என்று அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகரான டாக்டர் ஆண்டனி ஃபவுசி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இதுவரை ஓமிக்ரான் கிருமி கண்டுபிடிக்கப்படவில்லை என்று என்பிசியின் 'Weekend Today'க்கு அளித்த ேபட்டியில் கூறிய திரு ஃபவுசி, அந்தக் கிருமியின் அதிவேகத்தில் பரவும் தன்மையால் அமெரிக்காவில் முன்பே நுழைந்திருந்தாலும் ஆச்சரியமில்லை என்றார்.

ஜெர்மனியில் 'ஓமிக்ரான்'

பெர்லின்: ஜெர்மனியில் இரண்டு ஓமிக்ரான் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய இருவருக்கு ஓமிக்ரான் கிருமித்தொற்று இருந்ததாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரும் திருமணமான தம்பதியர். செவ்வாய்க்கிழமை அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பியபோது சோதனையில் அவர்களுக்கு புதிய கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டதாக ஜெர்மனி சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

தப்பியோடிய வடகொரிய

சிறைக்கைதி பிடிபட்டார்

பெய்ஜிங்: சிறையிலிருந்து தப்பிச்சென்ற வடகொரிய கைதியை நாற்பது நாட்களுக்குப் பிறகு சீன அதிகாரிகள் பிடித்துள்ளனர். அவரைக் கண்டுபிடிக்க உதவுவோருக்கு 23,000 யுஎஸ் டாலர் வெகுமதி அளிக்கப்படும் என்று வட-கிழக்கு சீன அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

வடகொரியாவிலிருந்து தப்பி வெளியேறிய 39 வயது ஷு ஸியான் ஜியான் சீனாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இம்மாதம் 18ஆம் தேதி ஜிலின் நகரில் உள்ள தடுப்பு நிலையத்திலிருந்து அவர் தப்பியோடியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

"இன்று காலை 10.00 மணிக்கு அவர் பிடிபட்டார்," என்று ஒரு வரி அறிக்கையில் ஜிலின் நகரப் போலிசார் தெரிவித்தனர். அவர் எப்படி பிடிபட்டார் என்பது குறித்து விவரமில்லை.

பிலிப்பீன்சுக்கு தடுப்பூசி தேவை

மணிலா: பிலிப்பின்ஸ், இருபது மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பூசிகளை கூடுதலாக வாங்க விருக்கிறது. 2022 நடுப்பகுதியில் மக்கள்தொகையில் எண்பது விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடும் இலக்கை நிறைவேற்ற கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுவதாக அந்நாட்டின் அதிகாரிகள் கூறினர்.