லண்டன்: ஸ்காட்லாந்தில் ஆறு பேர் ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகையால் பாதிப்படைந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் சிலர் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் உள்ள நாடுகளுக்குச் சென்ற பயணிகளுடன் தொடர்புடையவர்கள் அல்லர்.
இதனால் ஓமிக்ரான் கிருமி வகை ஸ்காட்லாந்தில் சமூக அளவில் பரவி வரும் சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதிக்குப் பயணத் தடையை பிரிட்டன் விதித்துள்ளது.
கடைகளுக்குச் செல்பவர்களும் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்பவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
40 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து உடனடியாக மறுஆய்வு செய்யும்படி தடுப்பூசி தொடர்பான மருத்துவப் பிரிவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இரண்டாவது தடுப்பூசிக்கும் பூஸ்டர் தடுப்பூசிக்கும் உள்ள கால இடைவெளியைக் குறைப்பது குறித்தும் பரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

