மணிலா: கொவிட்-19க்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அடுத்த மூன்று நாட்களில் ஒன்பது மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட பிலிப்பீன்ஸ் இலக்கு கொண்டுள்ளது.
இந்த மாபெரும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆயிரக்கணக்கான தொண்டூழியர்களை அது பயன்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது, தடுப்பூசி போடும் இடங்களில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர்.
முதலில் 15 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.
ஆனால் பிறகு அது 9 மில்லியனுக்குக் குறைக்கப்பட்டது. பிலிப்பீன்ஸில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்கும் நிலையில், இந்த இலக்கை எட்டி சாதனை படைக்க பிலிப்பீன்ஸ் அரசாங்கம் விழைகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நாள்தோறும் சராசரியாக 829,000 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
எனவே அடுத்த மூன்று நாட்களில் நாள் ஒன்றுக்கு மூன்று மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டால் அது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும்.
ஓமிக்ரான் கிருமி வகை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதால் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கையை அதிகரிப்பது மேலும் முக்கியத்துவம் பெற்று விட்டதாக பிலிப்பீன்ஸ் சுகாதாரத் துறை தெரிவித்தது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட
சுற்றுப்பயணிகளுக்குத்
தற்காலிகத் தடை
உருமாறிய கொவிட்-19 கிருமி வகையான ஓமிக்ரான் பிலிப்பீன்ஸில் பாதிப்பை ஏற்படாதிருக்க அந்நாடு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுப்பயணிகளை அனுமதிக்க முதலில் எடுக்கப்பட்ட முடிவை அது தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

