புதிய 'ஓமிக்ரான்' வகை கொரோனா கிருமி தொற்றியதாக சந்தேகிக்கப்படுபவர்கள், வீட்டில் குணமடைய அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
அவர்கள் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
தொடர்ந்து பரிசோதனைகள் செய்து, 'தொற்று இல்லை' என்று மருத்துவர்கள் உறுதிசெய்த பின்னரே அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர்.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு இன்று பிற்பகலில் (நவம்பர் 30) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் திரு ஓங் இதைத் தெரிவித்தார். அவர், அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவராவார்.
அத்துடன், 'ஓமிக்ரான்' கிருமி தொற்றியதாக உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் முழுமையாக அடையாளம் காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் பத்து நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள அரசாங்கம் ஒதுக்கிய இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
அவர்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி இல்லை என்று திரு ஓங் கூறினார்.
அத்தகைய நெருங்கிய தொடர்புகள் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான காலம் தொடங்கும்போதும் முடியும்போதும் அவர்களுக்கு 'பிசிஆர்' பரிசோதனைகள் செய்யப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களின் பரிசோதனை மாதிரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மரபணுச் சோதனைக்கு அனுப்பப்படும்.
அந்தச் சோதனைகளில் அவர்களுக்கு 'ஓமிக்ரான்' வகை கிருமி உள்ளதா இல்லையா என்பது உறுதிசெய்யப்படும்.


