கிருமிப் பரிசோதனைகளை அதிகப்படுத்தும்படி இந்திய மாநிலங்களுக்கு அறிவுறுத்து

கிருமிப் பரிசோதனைகளை அதிகப்படுத்தும்படி இந்திய மாநிலங்களுக்கு அறிவுறுத்து

1 mins read
653a73f1-2eb6-42f0-9adc-81daea23691b
இந்திய சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர், பெங்களூரில் ரயில் பயணிக்கு நேற்று (நவம்பர் 29) கொவிட்-19 கிருமிப் பரிசோதனையை மேற்கொண்டார். ஓமிக்ரான் அச்சுறுத்தலால், கர்நாடக அரசாங்கம் முன்னெச்செரிக்கையாக விமான நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் கிருமிப் பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது. -

கிருமிப் பரிசோதனைகளை அதிகப்படுத்தும்படி இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்திய மாநிலங்களுக்கும் ஒன்றிய பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் 'ஓமிக்ரான்' வகை கொரோனா கிருமியை முன்கூட்டியே அடையாளங்கண்டு அதைக் கையாளும் பொருட்டு, கிருமிப் பரிசோதனைகளை அதிகரிக்கவேண்டும் என்று திரு பூஷன் கூறினார்.

'ஓமிக்ரான்' கிருமிப் பரவல் குறித்து கவலை அதிகமாகியுள்ள வேளையில், மாநில அதிகாரிகளுடன் இன்று (நவம்பர் 30) திரு பூஷன் மறுஆய்வு கூட்டத்தை நடத்தினார்.

'பிசிஆர்' பரிசோதனைகளிலும் விரைவுப் பரிசோதனைகளிலும் 'ஓமிக்ரான்' கிருமி கண்டுபிடிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அதனால், அனைத்து கொவிட்-19 மாதிரிகளையும் மரபணுச் சோதனைக்காக உடனடியாக அனுப்பவேண்டும் என்றும் திரு பூஷன் வலியுறுத்தினார்.

அதனுடன், போதுமான சுகாதாரக் கட்டமைப்பும் கண்காணிப்பின்கீழ் இல்லத் தனிமையில் இருப்பதற்கான ஏற்பாடுகளும் இருப்பதை மாநிலங்கள் உறுதிசெய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் இதுவரை 'ஓமிக்ரான்' வகை கிருமி கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.