புதிதாக தலைதூக்கி உள்ள கொவிட்-19 உருமாறிய ஓமிக்ரான் கிருமியை பொறுத்தவரை அதனுடைய மரபணுக்கள் பெரியளவில் திடீர் மாற்றங்களுக்கு உட்பட்டவை.
இதற்கு முன்னதாக தனித்த ஓர் உருமாறிய கொவிட்-19 கிருமி எதிலும் அந்த அளவுக்கு மரபணுக்கள் திடீர் மாற்றங்களுக்கு உட்பட்டதாகத் தகவல் இல்லை.
உருமாறிய ஓமிக்ரான் கிருமியின் புரதத்தில் காணப்படும் 5,000 மரபணுக்களில் 32 திடீர் மாற்றங்களை இதுவரை அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதை வைத்துப் பார்க்கையில், இதர கொவிட்-19 உருமாறிய கிருமிகளில் இருந்து ஓமிக்ரான் கிருமி வேறுபட்ட இயல்புகளைக் கொண்டிருக்கக்கூடும் என்று நம்புவதற்கு இடமுள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இன்று நடைபெற்ற அமைச்சுகள்நிலை கொவிட்-19 பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஓமிக்ரான் மரபணுவில் காணப்படும் அளவுக்கு டெல்டா கிருமி மரபணுவில் திடீர் மாற்றங்கள் காணப்படவில்லை. இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது டெல்டாவைவிட ஓமிக்ரான் வேகமாக, பரவலாகப் பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கலாம்.
அது, கொவிட்-19 உருமாறிய இதர கிருமிகளைவிட அதிக ஆதிக்கம் செலுத்துமா என்பதைப் பொறுத்தவரை, நாம் மிகவும் எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
ஒரு கிருமியின் முக்கியமான அங்கம் அதன் வெளிப்புறத்தில் காணப்படும் புரதமாகும். அதுதான் மனித உயிரணுவில் அந்தக் கிருமி ஒட்டிக்கொள்ள வகைசெய்கிறது. அப்படி ஒட்டிக்கொண்டதும் அந்தக் கிருமி உயிரணுவில் பரவுகிறது.
ஆகையால், ஒரு கிருமியின் வெளிப்புற புரதத்தில் ஏற்படும் திடீர் மாற்றம், அந்தக் கிருமி மனித உயிரணுக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை முடிவு செய்வதாக இருக்கும் என்று சிங்கப்பூரின் மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மாக் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
புதிதாக தலைதூக்கி உள்ள ஓமிக்ரான் கிருமியின் புரதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, அந்தக் கிருமியைக் கண்டுபிடித்து அதைத் தடுப்பதற்கான ஆற்றலில் பாதிப்பு இருக்கக்கூடும் என்று இணைப் பேராசிரியர் மாக் தெரிவித்தார்.

